Sunday, March 9, 2008

நல்லதொரு குடும்பம்

ஹஜ்ஜுப் பெருநாள் முடிந்துவிட்டால் கூட அதன் அடையாளங்கள் சட்டென்று மறைந்து விடுவதில்லை. மலர் வாடினாலும் மணம் வீசுவது போல அதன் வாசனை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள் என்ற திருக்குர் ஆனின் 2.203 வசனத்திற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் தருகிற விளக்கத்தின்படி துல் ஹஜ் 10 ம் நாளாகிய பெருநாள் தினமும் அதை தொடர்ந்து வருகிற மூன்று நாட்களும் அய்யாமுத்தஷ்ரீக் எனப்படுகிறது. அந்நாட்களில், கூட்டுத்தொழுகைகளுக்குப் பின் தொடர்ந்து ஓதப்படிகிற தக்பீரின் ஒலியால் முஸ்லிம் மஹல்லாக்களில் உற்சாகமும் பக்திப்பரவசமும் படர்கிறது. அது மட்டுமல்ல முஸ்லிம்களின் வீடுகள் தோரும் குர்பானி இறைச்சி சுக்க வைப்பதற்காக தோரணங்கட்டி தொங்கவிடப் பட்டிருக்கும். அய்யாமுத்த்ஷ்ரீக் என்ற வார்த்தைக்கான பொருளே குர்பானி இறைச்சியை உலர வைக்கிற நாட்கள் என்பது தான். அந்த காய்ந்த இறைச்சி அடுத்த காலாண்டுகளுக்காவது ஹஜ்ஜுப் பெருநாளை நினைவு படுத்திக் கொண்டிருக்கும்.
சில பகுதிகளில் ஹஜ்ஜுப் பெருநாளை பெரிய பெருநாள் என்றும் குறிப்பிடுவதுண்டு. அது எதனால் என்பது ஒரு ஆராய்சிக்குரிய விசயம் தான். ஒரு நாளோடு முடியாமல் பல நாட்களுக்கு தொடரும் அதன் அடையாளங்களாலா? அல்லது பெருந்தகை ஹஜ்ரத் இபுராஹீம் (அலை) அவர்கள் நினைவு கூறப்படுகிற நாள் என்பதாலா? என்ற கேள்விகள் தொடர்ந்தால் அதில் பல சுவையான தகவல்கள் கிடைக்கலாம். எப்படி இருப்பினும் ஹஜ்ஜுப் பெருநாள் அந்தப் பெயருக்கு பொருத்தமான நாள்தான்.
ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாளை விட ஈதுல் அள்ஹா எனும் ஹஜ்ஜுப் பெருநாள் தருகிற செய்திகளும் அது தருகிற சிலிர்ப்பூட்டும் உணர்வுகளும் பெரியது தான். பெரியது மாத்திரம் அல்ல, ஏராளமானதும் கூட. ஏராளமானது மாத்திரம் அல்ல தொடர்ச்சியானதும் கூட.
இன்றிலிருந்து சுமார் 4167 வருடங்களுக்கு முன்னாள் இராக்கிலிருந்து புலம் பெயர்ந்து சிரியாவிலும் பின்னர் மக்காவிலுமாக வாழ்ந்த ஒரு சிறு குடும்பத்தின் கதையை பன்னூறு தலைமுறைகளுக்கு அப்பாலும் வரலாற்றின் வேகமும் விசித்திரங்களும் நிறைந்த ஓட்டங்களை வென்று வாழும் படி செய்து கொண்டிருப்பதனால் சந்தேகத்திற்கிடமின்றி ஹஜ்ஜுப் பெருநாள் பெரிய பெருநாள் தான்.
அந்த்ச் சிறு குடும்பம் ஹஜ்ரத் இபுறாகீம்அவரது மனைவி ஹாஜரா குழ்ந்தை இஸ்மாயீல் (அலை) ஆகிய மூவரைக் கொண்டது. இந்தக் குடும்பத்தில் நடந்த எதேச்சையான விசயங்களும் அது சந்தித்த சிரமங்களும் வாழையடி வாழையாய் மனித சமூகம் அனுபவிக்க வேண்டிய கடமைகளாக மாறின.
ஒரு சிறு குடும்பத்தின் வாழ்க்கை தலைமுறைகளைத் தாண்டி நிலைக்கவும் பின்பற்றப்படவும் காரணமாக அமைந்த விசய்ங்களை மிகுந்த அக்கறையோடு கவனிக்க மனித சமூகம் கடமைப் பட்டிருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் பெரும் பாலோருக்கு சிறு குடும்பம் தான். ஆனால் அச்சிறு குடும்பத்தின் தேவைகளுக்காகவும் சுக வாழ்வுக்காகவும் மனித சமூகம் இழக்கிற மனிதத்தன்மையும் நிகழ்கிற கொடுமைகளும் அதிகம். மிக அதிகம்.
ஒரு இன்ஷியல் மாற்றத்திற்காக வரும் மாணவரிடம் 50 ரூபாய் வசூலிக்கிற சாதாரண குமாஸ்தாவிலிருந்து பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக 500000 லட்சம் வசூலிக்கிற மக்கள் பிரதிநிதி வரை லஞ்சம் வாங்குகிறார்கள். அது எதற்காக என்று கேட்டுப்பார்த்தால் எல்லாம் குடும்பத்திற்காகத்தான் என்று பதில் வரும்.
குடும்பத்தின் சுக வாழ்வுக்காகவே தேயிலையிலிருந்து தேன் வரை ஒவ்வொன்றிலும் கலப்படம் அல்லது எடை குறைவு செய்கிறார் வியாபாரி.
கொலை கொள்ளை போன்ற கொடுஞ் செயல்கள் செய்கிற குண்டர்களை விசாரித்தால் குடும்பத்தை காப்பாற்று வதற்காகவே இத்த்னையும் செய்வதாக கூறுகிறார்கள்.
ஆபாசமாக நடிக்கிற நடிகைகளை அல்லது மோசமான நடத்தை கொண்ட பெண்களிடம் கேட்டால் குடும்த்திற்காகவே இவ்வாறு வாழ்வதாக சத்தியம் செய்வார்கள்.
தேசத்தை கட்டிக் கொடுக்கிற ஈனச் செய்லில் ஈடுபடுபவர்களை பிடித்து விசாரித்தால் குடும்பத்தின் நன்மைக்காவே இந்த கொடுமையை செய்ய நேர்ந்தது என்று புலம்புவார்கள்.
அவர்களது குடும்பம் எவ்வளவு பெரிது என்று விசாரித்தால் எண்ணிக்கை 5 விரல்களை தாண்டாது. தனது சிறு குடும்பத்தின் தேவையை பெரிது என்று கருதுபவர்கள் பல சமயத்திலும் சமுதாயத்திற்கு மிகப் பெரும் தீமைகள இழைத்து விடுகிறார்கள்.
அத்தோடு அவர்களது மனிதப்பண்பையும், கண்ணியத்தையும், சுய கவுரவத்தையும் கூட இழந்து விடுகிறார்கள்.
இதற்கு அவர்களது குடும்பத்தினரும் உடந்தையாகவே உள்ளனர். அல்லது கண்டுகொள்வதில்லை.
குடும்ப வாழ்வில் நீதி, தர்மம், சுய மரியாதை ஆகிய பண்புகளை கவனத்தில் கொள்கிற மனைவி அல்லது குழ்ந்தைகளின் எண்ணிக்கையும் குறைவாக்வே இருக்கிறது.
கலீபா உமர் (ரலி) காலத்தில் நடந்த்தாக ஒரு செய்தி சொல்லப்படுவதுண்டு. ஒரு பால் வியாபாரியின் வீட்டில் ஒரு உரையாடல் நடக்கிறது. பாலில் தண்ணீரை கலக்குமாறு அந்த வீட்டின் தலைவி கூறுகிறார். அவர்களது மகளோ அதை மறுத்து, அம்மா கலீபா உமர் அவர்களுக்கு விசயம் தெரிந்தால் கடுமையாக கோபித்துக் கொள்வார்கள் கலப்படம் செய்யாதே என்கிறாள். உமர் இப்போது நம்மை பார்த்துக் கொண்டா இருக்கிறார்? என்று தாய் கேள்வி கேட்க, அம்மா உமர் பார்க்காவிட்டாலும், நம்முடைய இறைவன் பார்த்துக் கொண்டல்லவா இருக்கிறான் என்று மகள் சொன்னாராம்.
இப்படி ஒரு இல்லம் வரலாற்று பக்கங்களில் மட்டுமே வாசிக்கக் கிடைடக்கிறது. இன்றைய வாழ்வியல் போங்கிலோ, எப்படியாவது சம்பாதித்துக் கொடு என்று கேட்கிற மனைவி, என்ன செய்தாவது வசதிகளை செய்து கொடு என்று கேட்கிற பிள்ளைகள் இருக்கிற போது ஒரு சிறு குடும்பமே பெரும் சமுதாயச் சீரழிவிற்கு போதுமானதாக இருக்கிறது. கும்பகோணத்தில் ஒரு பள்ளிக் கூடத்தில் நூற்றுக் கணக்கான குழ்ந்தைகள் எரிந்து சாம்பலனதின் பின்னணியில் ஏதோ ஒரு அதிகாரி லஞ்சம் பெற்றுக் கொண்டு கொடுத்த அனுமதிதான் காரணம் என்பதை அறியும் போது ஒரு குடும்பத்தின் மதிப்பீடற்ற வாழ்க்கை காரணமாக நிகழக்கூடிய ஆபத்தின் கனபரிமாணத்தை உணர முடியும்.
இந்த சூழ்நிலையில் குடும்பத்திற்காக தனது உயர்தரமான பண்புகளை விட்டுக் கொடுக்காத இலட்சியத் தந்தையாக ஹஜ்ரத் இப்றாகீம் (அலை) அவர்கள் திகழ்ந்த வரலாற்றை ஹஜ்ஜுப் பெருநாள் மிக அழுத்தமாக நினைவூட்டுகிறது.
இபுறாகீம் (அலை) அவர்களது குடும்ப வாழ்வு ஒரு திட்டமிட்டநோக்கில் அமைந்த்தாகவும் உயர்ந்த எதிர்பார்பை கொண்டதாகவும் இருந்தது.
இறைவா! என்னையும் என்னுடைய குடும்பத்தையும் வணக்க வழிபாடுகளை நிலை நிறுத்துபவர்களக ஆக்கு! (அல்கு ஆன் 14:40) என்ற அவரது பிரார்த்தனை அவரது வாழ்கையின் இலட்சியத்தை எடுத்துக் கூறுகிறது என்றால், '',wtNd! eP vdf;F Qhdj;ij mspg;ghahf. NkYk;> ey;ytHfSld; vd;idr; NrHj;J itg;ghahf! ,d;Dk;> gpd; tUk; kf;fspy; vdf;F eP ew;ngaiu vw;gLj;Jthahf! (26:84>) என்ற அவரது பிரார்த்தனை அவரது குடும்பம் பிற்கால சமுதாயம் போற்றும் வண்ணம் புகழ்பூத்ததாக விளங்க வேண்டும் என்ற உன்னதமான எதிர்பார்ப்பை புலப்படுத்துகிறது.
ஒரு பார்வைக்கு ஒரு தந்தையாக அவரது சில நடவடிக்ககள் கருணைக் குறைவானதாக, நெகிழ்சி அற்றதாக தோன்றினாலும் கூட அது புறத்தோற்றமே தவிர எதார்த்தமல்ல. ஒரு இலட்சிய வேகம் கொண்ட மனிதரின் உறுதியின் கடுமை சில வேளைகளில் அவரது நடவடிக்கயில் வெளிப்படும். அந்த நடவடிக்கையை அந்த பின்புலத்தோடுதான் மதிப்பிட வேண்டும். ஒரு திரட்சியான வீரன் அவனது மனைவியை ஆசையோடு அணைக்கையில் சில வேளைகளில் அது அவளை நோகச் செய்யக் கூடும். ஆனால் அந்தக்கடுமை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படது அவனது ஆசைதான் கவமிக்கப் படும்.அது போலவே இபுறாகீம் அலை அவர்களின் கடுமயான நடவடிக்கை களை அவரது கொள்கை உறுதிப்பாட்டின் பின்னணியில் தான் கவனிக்க வேண்டும். ஒரு இறைவனை உணர்ந்து கொண்ட பிறகு, அந்த இறைவனுக்கு கட்டுப்படுகையில் ஏற்படுகிற எந்தச் சிரமமும் சுகமானதாக்வும் நன்மையானதாக்வும் மாறுவதை அனுபவித்து அறிந்த பிறகு ஒரு தெளிவான மனிதரின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்க முடியும். இவ்வாரன்றி வேறெப்படி இருக்க முடியும்?
ஹாஜ்ரா அம்மையாரையும் குழ்ந்தை இஸ்மாயீலையும் பாலை வனப் பொட்டல் வெளியில் தனியாக விட்டு வரும்போதாகட்டும், மகனை அறுப்பதற்காக கத்தியை தீட்டிய போதாகட்டும் இபுறாகீம் அலை அவர்களிடமிருந்து வெளிப்படுவது நம்ரூதின் நெருப்புக்குண்டத்தில் வீசப்பட்ட போது தனது வாழ்வைப் பற்றிய எந்த உறுதிப்பாடு அவருக்கு இருந்ததோ அதே உறுதி தான்.
இறைவனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்ட வாழ்கயில் எந்த அர்ப்பணிப்பும் வீணாவதில்லை. அது மேலும் நன்மையை கொண்டுவருகிறது. மேலும் மகிழ்ச்சியை தருகிறது என்பதை அனுபவித்து உணர்த மனிதர் சோதனை களங்களில் தயக்கமின்றி பங்காற்றுவார். அவர் கருணையற்றவரோ, நொகிழ்வுத்தன்மை இல்லாதவரோ அல்ல. அவர், தனது இறைவன் எந்த உத்தரவை சொன்னாலும் அது நன்மையானதாகத்தான் இருக்கும். அந்த உத்தரவிற்கான தூர நோக்கு உடனடியாக புரியாவிட்டாலும் கூட அதில் சம்பதப்பட்ட யாரும் நஷ்டத்திற்குள்ளாக மாட்டார்கள் என்பதை உள்ளம் நிறைய உறுதி கொண்டிருப்பவர் என்றே அவரது நடவடிக்ககளுக்கு பொருள் கொள்ள வேண்டும்.
முஸ்லிம் குடும்பத்தலைவர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் தருகிற அழுத்தமான செய்தி இது. ஏதோ குடும்பம் அமைந்து விட்டது எப்படியாவது நாமும் வாழ்ந்து நமது குடும்பத்தையும் மகிழ்சியாக வாழவைத் விட்டு போய்ச் சேருவோம் என்று நினைப்பவர்கள் தங்களது வாழ்க்கையை மதிக்கத் தெரியாதவர்கள். தமது குடும்பத்தின் மரியாதையை பற்றி அக்கறையற்றவர்கள் என்று பொருள். ஒரு முஸ்லிம் குடும்பத்தலைவர் இப்படி இருக்கமாட்டார். அவரிடம் குடும்பத்தின் மகிழ்சி குறித்த அக்கறை இருக்கிற அளவு இறைவனுக்கு கட்டுப்படுதல் குறித்து தெளிவும் உறுதிப்பாடு இருக்கும்.
ஒரு குடும்பத்தலைவனிடத்தில் இத்தகைய உறுதி எத்தனை சதவீதம் இருக்கிறதோ அந்த அளவு அவரது குடும்பம் நல்ல குடும்பமாக இருக்கும். அந்த குடும்பத்தின் பயணப் பாதையில் இடையில் சில சிரமங்கள் இடறினாலும் கூட சுகமான ஒரு எதிர்காலம் கட்டாயம் கிடைக்கும். வாழும் சமூகத்தில் அந்தக் குடும்பம் ஒரு வெளிச்சமான இடத்தை பெரும்.
ஒரு குடும்பத்தலைவனிம் உறுதியும் கண்டிப்பும் வெளிப்படையாகவும் பாசம் அவனது நெஞ்சுக்கள்ளேயும் இருக்க வேண்டும். ஒரு லட்சியக் குடும் பத்தை வழி நடத்த அது உத்வும்.
நபி இபுறாகீம் (அலை) அவர்களிடம் உற்தியும் கண்டிப்பும் வெளிப்படையாக இருந்தது.பாசம் மனதுக்குள் இருந்த்து. அதனாலேயே மனைவி ஹாஜரா அம்மையாரையும் குழந்தை இஸ்மாயீல் அலை அவர்களையும் பாலைவனத்தில் விட்டு விட்டு நகர்ந்த்தும் அந்தப் பாசம் அவரை இறைவன நோக்கி கையேந்த வைத்தது.
எங்கள் இறைவனே! நான் எனது குடும்பத்தை விவசாயமற்ற ஒரு பள்ளத்தாக்கில், கண்ணியம் மிகுந்த உன் வீட்டின் அருகே வசித்திருக்கச் செய்து விட்டேன். வணக்க வழிபாட்டை நிலை நிறுத்துவதற்காக அவ்வாறு செய்தேன். மக்களின் ஒரு சாராரின் இதயத்தை அவர்களை நோக்கி நீ திருப்பி விடு! கனி வகைகளை அவர்களுக்கு உணவாக வழங்குவாயாக! அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள். (அல்குர் ஆன் 14:37)
பிரம்மிப்பூட்டும் வகையில் இறைவன் அவரது பிரார்த்தனை அங்கீகரித்தான். பாலை வனத்தில் விடப்பட்ட அவரது அந்தக் குடும்பம் மாத்திரமல்ல ஆயிரமாயிரம் வருடங்களுக்கு அப்பாலும் அங்கு வந்து சேர்கிற லட்சக்கணக்கான குடும்பத்தினரை பலைவனத்தில் தாகத்தல் தவித்துப் போய்விடத வாரும், பசியால் வாடிப் போய்விடாத வாரும் பாதுகாத்து வருகிறான். ஆண்டு தோரும் லட்ச்க்கணக்கானோரை அந்த இடத்தை நோக்கி திருப்பி விடுகிறான்.
ஒரு குடும்பத் தலைவனின் உன்னதமான லட்சியமும் அந்த லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவர் காட்டுகிற உறுதிப்பாடும் அவர் வென்றெடுக்கிற சோதனைகளும் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எத்தகைய இரவா புகழைத் தேடித்தரக் கூடியது என்படற்கு இபுறாகீம் (அலை) அவர்களது குடும்பம் மிகச்சிறந்த உதாரணம்.
மனைவியை துணைவி என்றும் சொல்வதுண்டு. காதல் ஒருவனை கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து அவள் வாழ்வதால் இந்தப் பெயர் வந்தது. இந்தப் பெயர் இபுறாகீம் நபியின் இரண்டாவது மனைவி அன்னை ஹாஜரா அம்மையார் அவர்களுக்கு பொருந்துவது போல மற்றெவருக்கும் பொருந்த்துவது அரிது. தனது கணவரின் எண்ணவோட்டத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்ந்த மிக அற்புதமான குடும்பத் தலவியாக அன்னை ஹாஜரா அவார்கள் திகழ்கிறார்கள். ஆள் ஆரவாரம்ற்ற பாலை வனத்தில் கொண்டு வந்து, பச்சைக் குழந்தையோடு தனியே விட்டு விட்டு, வந்த வழியே புறப்படுகிற கணவரைப் பார்த்து இது இறைவனின் திட்டமா என்று கேட்ட ஒரு கேள்வியில் ஹாஜர அன்னையின் அறிவாற்றல், பக்தி, துணிச்சல், தெளிவு, உடன்பாடு, ஆகிய அனைது அம்சங்களும் வெளிப்பட்டன.
மனைவி என்றால் மிக அதிகமாக பேசுபவர் என்பது தான் மனித அகராதி சொல்லுகிற பொருள்.ஆனால் அன்னை ஹாஜராவோ மிக குறைவாக பேசிய அந்த ஒரு கேள்வியில் மனித வரலாற்றில் மிக ஆழமாக தனது தடத்தை பதிவு செய்து விட்டார்கள்.அந்த அன்னையின் மொத்தப் பண்புகளும் அந்த ஒரு கேள்வியில் உருவம் பெற்றுவிட்டது.
இறைபக்தியும் அறிவும் துணிச்சலும் ஒரு சிறந்த குடும்பத்த்லைவிக்கான இலக்கணங்கள் என்ற செய்தியையும் ஹஜ்ஜுப் பெருநாள் சுமந்து வருகிறது. அன்னை ஹாஜரா அம்மையாரைப் பற்றிய நினைவுகள் இந்தபப் பாடத்தை தருகின்றன. முஸ்லிம் குடும்பத்தலைவிகள் இந்த மூன்று அம்சங்களிலும் தங்களது தரத்தை பரிசீலனை செய்து கொண்டால் இன்றைய முஸ்லிம் குடும்பங்களில் இருக்கிற ஏராளமான சீர்கேடுகளை கலைந்து விட முடியும்.
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. அவை இறைவன் உங்களுக்கு வழங்கிய கொடைகள் என தத்துவ அறிஞர்கள் கூறுவதுண்டு. தனக்கு கொடையாகத் தருமாறு இபுறாகீம் (அலை) இறைவனிடம் கேட்டுப் பெற்ற பிள்ளை தான் ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்கள்.அவர் தான் இந்தப் புனிதக் குடும்பத்தின் மூன்றாவது பிரஜை.
உனக்காக நான் என் தலையையே தருவேன் என்று பேசுபவர்களப் பார்த்திருப்போம். பத்து ரூபாய் கடன் கேட்டு விட்டால் பிறகு தலையையே காட்டமாட்டார்கள். செந்தப் பிள்ளகள் கூட அப்படி அமைந்து விடுவதுண்டு. காலில் தூசி படாதவாறு தோளில் சுமந்து சென்ற தந்தையை அவர் கண்ணில் பூ விழுந்திருக்க்கிற போது அவரது விரல் பிடித்துச் செல்லத் தயங்குகிற காட்சிககள் ஒன்றும் அரிதானதல்ல.
ஆனால் நபி இபுறாகீம் (அலை) அவர்களது அன்புப் பிள்ளையோ தந்தையின் கனவை - பெற்ற பிள்ளையையே அறுத்துப் பலியிடும் கனவை - நனவாக்குவதற்காக உண்மையிலேயே தலையை தரிக்கக் கொடுத்தார். தந்தையே! உங்களது கனவு மெய்ப்பட நான் ஒத்துழைப்பேன். அறுங்கள்! நான் குப்புறப் படுத்துக் கொள்கிறேன்.என்றார்.அல்குர் ஆன் :37:102,1030)
ஒரு நல்ல மகனது இலட்சணத்தை இஸ்மாயீல் (அலை) அவர்கள் வழியாக ஹஜ்ஜுப் பெருநாள் சமுதாயத்திற்கு அடையாளப் படுத்துகிறது. பெற்றோரை புரிந்து கொண்டு அவர்களுக்கு கட்டுபடுவதும் அவர்களது பணிகளில் அவர்களுக்குத் துணை நிற்பதும் அவர்களது பெருமையை பாதுகாக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதே நல்ல குழந்தையின் இலக்கணம் என்பதை தனது ஒவ்வொரு செயலிலும் நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
இஸ்மாயீல் (அலை) அவர்களின் கட்டுப்பாடு மெச்சப்படுகிற அதே நேரத்தில் அவரது அம்மாவின் வளர்ப்பும் கவனிக்கப் பட வேண்டும். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை தாயின் வளர்ப்புதான் தனயனிடம் ஏற்படுத்தும். ஹாஜரா அம்மையாரின் வளர்ப்பின் வாலிப்பான அனுபவமாகவே இஸ்மாயீல் (அலை) திகழ்கிறார்கள். தந்தை ஒன்றை சொல்லும் போது, அது கிடக்குது போ! நீ போய் உன் வேலையை பாரு! என்று சொல்லுகிற அனனையாக ஹாஜரா அம்மைமயார் இருக்கவில்லை என்பதையே வரலாறு காட்டுகிறது.
ஏதாவது நல்ல குழந்தைகளை பார்த்துவிட்டால் தாய்க்குலம் பெருமுற ஒரு வார்த்தையுண்டு. இது வல்லவோ பிள்ளை? எனக்கும் இருக்கிறதே நான்கு நாரப்பிள்ளைகள்!
இப்படிப் பேசிவோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கைய ஒரு முறை யோசித்து விட்டுப் பேசுவது நல்லது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான மார்க்கத்தில் தான் பிறக்கின்றன.பெற்றோர்கள் தாம் அவற்றை யூதர்களாக்வோ கிருத்துவர்களாகவோ திருப்பிவிடுகிறார்கள். (ஸஹீஹுல் புஹாரி 1385)
ஒரு பெற்றோரின் பிரதான கடமை தங்களது பிள்ளைகள் தங்களால் சீர்கெட்டுப் போய்விடாதவாறு பார்த்துக் கொள்வது என்ற எச்சரிக்கையை இது தருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜுப் பெருநாள் ஒரு நல்ல குடும்பத்தின் வரலற்றை நினவூட்டி உலக மக்கள் அனைவரும் தமது குடும்பத்தை சீர்தூக்கிப் பார்த்துக கொள்ளும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. குடும்பத்தலைவனிடத்தில் உறுதி, குடும்பத்தலவியிடத்தில் தெளிவு, குழந்தைகளிடம் கட்டுப்பாடு என்ற மூன்று அம்சங்களும் ஒரு நல்ல குடும்பத்திற்கான இலக்கணங்கள் என்பதை ஹஜ்ஜுப் பெருநாள் தனக்கே உரிய சிலிர்ப்போடு சொல்லிச் சொல்கிறது.
ஹஜ்ஜுப் பெருநாள் நினைவூட்டுகிற இபுறாகீம் நபியின் குடும்பத்தின் வரலாற்றை படித்து விட்டு, எனக்கும் இப்படி ஒரு குடும்பம் அமையாதா? என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவர்களுக்கும் ஒரு வழியை ஹஜ்ஜுப் பெருநாள் காட்டுகிறது. அல்லாஹ்வை முன்னிருத்துவோருக்கு, அவனையே பெரிதென்று நினப்போருக்கு, நல்ல லட்சியமும் அதில் உறுதிப்பாடும் உள்ளோருக்கு நல்ல குடும்பத்தை அல்லாஹ் அமைத்துத் தருவான்.
உங்களுக்கு?

No comments: